“ஆயிரம் கைகள் மறைத்தாலும்...” - விசிக சஸ்பெண்ட் செய்த ஆதவ் அர்ஜுனா ரியாக்‌ஷன்

“துணைப் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு கடிதம் கிடைக்கப் பெற்றபோது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன்.

“ஆயிரம் கைகள் மறைத்தாலும்...” - விசிக சஸ்பெண்ட் செய்த ஆதவ் அர்ஜுனா ரியாக்‌ஷன்

சென்னை: “துணைப் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு கடிதம் கிடைக்கப் பெற்றபோது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன். அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துகளை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன். அந்தக் கொள்கைகளின் வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “‘அதிகாரத்தை அடைவோம்’ என்று திருமாவளவன் எந்த முழக்கத்தோடு இந்தக் கட்சியைக் கட்டமைத்தாரோ, அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்துக்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன்.