‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் ரூ.3,555 கோடியில் 483 பணிகளுக்கு அனுமதி
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைத்து எம்எல்ஏக்களும் தங்களது சட்டப்பேரவை தொகுதியில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கடந்த 2022 ஆக. 22-ம் தேதி முதல்வர் கடிதம் எழுதினார்.
சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைத்து எம்எல்ஏக்களும் தங்களது சட்டப்பேரவை தொகுதியில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கடந்த 2022 ஆக. 22-ம் தேதி முதல்வர் கடிதம் எழுதினார். இந்த திட்டத்துக்கான அரசாணை 2022 செப்டம்பரில் வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் எம்எல்ஏக்கள் அடங்கிய மாவட்ட அளவிலான குழு அந்த கோரிக்கைகளை ஆய்வு செய்து, பல்வேறு பணிகளை அரசுக்கு பரிந்துரை செய்தது. சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இவை அனுப்பப்பட்டு, அனைத்து துறைகளிடம் இருந்தும் இதுதொடர்பான விரிவான அறிக்கைகள் பெறப்பட்டன.
இதைத் தொடர்ந்து, 2023-24-ம் ஆண்டில் ரூ.10,968.65 கோடியில் 786 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், 2024-25-ம் ஆண்டுக்கான பணிகளை தேர்வு செய்வதற்கான குழு கூட்டம் தலைமைச் செயலர் தலைமையில் கடந்த அக்டோபர் 10-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 4-ம் தேதி உயர்நிலை குழு கூட்டம் நடந்தது. இதில் ரூ.3,555.53 கோடியில் 483 பணிகளை, நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் இணைத்து செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் முருகானந்தம், நிதித்துறை செயலர் உதயச்சந்திரன், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலர் தாரேஸ் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.