கில் நகர் பூங்காவில் பராமரிப்பு, பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக மக்கள் ஆதங்கம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த போது திறக்கப்பட்டு வெள்ளிவிழா கண்டுள்ள சூளைமேடு கில் நகர் பூங்கா சரி வர பராமரிக்கப்படாமலும் பாதுகாப்பு குறைபாடுகளுடனும் இருப்பதாக பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

கில் நகர் பூங்காவில் பராமரிப்பு, பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக மக்கள் ஆதங்கம்

சென்னை மாநகராட்சி 9-வது மண்டலம் (தேனாம்பேட்டை), 109-வது வார்டில் அமைந்திருப்பது சூளைமேடு கில் நகர் பூங்கா. இந்த பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது (அப்போது மண்டலம் 5, வார்டு 76)அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி முன்னிலையில் 1998-ம் ஆண்டு மே 14-ம் தேதி திறந்து வைத்தார். கடந்த ஆண்டு இந்த பூங்கா வெள்ளிவிழா கண்டது.

இந்தாண்டு இப்பூங்கா புனரமைக்கப்பட்டுள்ளது. 109-வது வார்டு மாநகராட்சி காங்கிரஸ் உறுப்பினர் சுகன்யா செல்வம் இதற்கான முயற்சியை மேற்கொண்டார். அதன்படி, 2023-24-ம் ஆண்டு வார்டு மேம்பாட்டு நிதியில் இருந்து திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.2 லட்சத்தில் செயற்கை நீர்வீழ்ச்சி மறுகட்டமைப்பு செய்யப் பட்டிருக்கிறது. பூங்கா பராமரிப்பு நிதியில் இருந்து ரூ.32 லட்சம் செலவில் பூங்கா மேம்படுத்தப்பட்டு உள்ளது. ரூ.6.28 லட்சத்தில் பாதுகாவலர் அறை மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் பூங்கா புனரமைப்பு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டபோது பதிக்கப்பட்ட கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.