“கூட்டணியில் இருப்போருக்கான அதிகாரம்...” - திருமாவளவன் ஆதங்கம்

கூட்டணியில் இருப்பவர்கள் அதிகாரம் கேட்டால் என்ன தவறு என பேச ஆள் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

“கூட்டணியில் இருப்போருக்கான அதிகாரம்...” - திருமாவளவன் ஆதங்கம்

சென்னை: கூட்டணியில் இருப்பவர்கள் அதிகாரம் கேட்டால் என்ன தவறு என பேச ஆள் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை இடைநீக்கம் செய்தது குறித்து தொண்டர்களுக்கு விளக்கமளித்து, ஃபேஸ்புக் நேரலையில் திருமாவளவன் பேசியது: “ஆதவ் மீது நடவடிக்கை எடுத்த அதே வேளையில் தமிழக முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்திக்க வேண்டிய சூழலும் இயல்பாக அமைந்துவிட்டது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. திமுகவுடனான முரண் குறித்து விசிகவின் அரங்கில் பேசலாம். ஆனால், ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை வைத்து திருமாவளவனின் வழிகாட்டுதலோடு அவர் பேசுவதாக விசிகவுக்கு எதிரான சக்திகள் கருத்தை முன்வைக்கத் தொடங்கினர்.

அதிகாரத்தில் பங்கு என்பதை பொதுவாக சொன்னாலும் திமுகவை சொல்வதாக திரித்து பேசுகின்றனர். திமுகவிடம் கேட்டால் என்ன? கூட்டணியில் இருப்பவர்கள் தங்களுக்கு அதிகாரம் வேண்டும், அமைச்சரைவையில் இடம் வேண்டும் என்று கேட்பதில் என்ன தவறு என பேசுவதற்கு ஆள் இல்லை. இவர் எப்படி கேட்கலாம்? இதன் மூலம் திமுகவுக்கு நெருக்கடி தருகிறாரா என்பது போல் பேசுகின்றனர். இதன் மூலம் விசிகவை கூட்டணியில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்தது.