சென்னை அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் மீது கொடூர தாக்குதல்: நடந்தது என்ன?

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் மீது கொடூர தாக்குதல்: நடந்தது என்ன?

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச் செல்ல முயன்ற அவரை பணியாளர்கள், பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அந்த இளைஞரை கைது செய்த போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பிரேமா. இவரது மகன் விக்னேஷ் (25). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரேமா கடந்த 6 மாதங்களாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அண்மையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரேமாவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தாம்பரம் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிரேமா வலியால் துடித்து அவதிப்பட்டுள்ளார். இதை பார்த்து வேதனை அடைந்த அவரது மகன் விக்னேஷ், நேற்று காலை சுமார் 10 மணி அளவில் கிண்டி கலைஞர் மருத்துவமனைக்கு வந்தார். புறநோயாளிகள் பிரிவில் ஓ.பி. சீட்டு வாங்கிக் கொண்டு, புற்றுநோய் மருத்துவ நிபுணர் பாலாஜியின் அறைக்குச் சென்றார்.