திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் கொட்டி தீர்த்த கன மழைக்கு அண்ணாமலையார் கோயில் மகா தீபம் ஏற்றப்படும்  அண்ணாமலை மலையில் டிச.1-ம் தேதி மாலை மண் சரிவு ஏற்பட்டது.

திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு நேற்று அஞ்சலி செலுத்தினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் கொட்டி தீர்த்த கன மழைக்கு அண்ணாமலையார் கோயில் மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலை மலையில் டிச.1-ம் தேதி மாலை மண் சரிவு ஏற்பட்டது. இதில், மலையடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் 11-வது வீதியில் இருந்த 4 வீடுகளின் மீது பாறைகள் விழுந்ததால் மண்ணில் புதைந்தன.

இதில், ராஜ்குமார் (38), அவரது மனைவி மீனா (27), இவர்களின் மகன் கவுதம் (9), மகள் இனியா (5) மற்றும் பக்கத்து வீட்டில் வசித்த சரவணன் மகள் ரம்யா (7), மஞ்சுநாதன் மகள் விநோதினி (14), சுரேஷ் மகள் மகா (7) ஆகிய 7 பேர் சிக்கினர். இவர்களை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட 170 பேர் ஈடுபட்டனர். மண் சரிவு ஏற்பட்ட 2-வது நாளில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 3-வது நாளான நேற்று முன்தினம் (டிச.3-ம் தேதி) மேலும் இருவரது உடல்கள் மீட்கப்பட்டன.