நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இடைவிடாத கனமழை - குற்றாலம் அருவிகளில் வெள்ளம்
திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
திருநெல்வேலி/ தென்காசி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று பகலிலும், இரவிலும் இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை வரையில் பல்வேறு இடங்களிலும் மொத்தமாக 18.40 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியிருந்தது. ஆனால், நேற்று காலை 7 மணி தொடங்கி பகல் முழுக்க மிதமான மழை நீடித்தது. மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 242 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பல்வேறு இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்- 61.40, சேரன்மகாதேவி- 55, மணிமுத்தாறு- 45.20, நாங்குநேரி- 24, பாளையங்கோட்டை- 14, பாபநாசம்- 20, ராதாபுரம்- 7.40, திருநெல்வேலி- 15.