பறவைகள் சரணாலயம் ஆகிறது சாமநத்தம் கண்மாய் - வனத்துறை தகவலால் மதுரை மக்கள் மகிழ்ச்சி!
சாமநத்தம் கண்மாயை மதுரையின் முதலாவது பறவைகள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை தெரிவித்துள்ள தகவலால் பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை: சாமநத்தம் கண்மாயை மதுரையின் முதலாவது பறவைகள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை தெரிவித்துள்ள தகவலால் பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை அவனியாரம் விமானநிலையம் அருகே சாமநத்தம் கண்மாய் அமைந்துள்ளது. கிருதுமால் நதியில் இருந்தும், வைகை ஆற்றில் இருந்தும் இந்த கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. சுமார் 3 ஆயிரம் எண்ணிக்கையிலான பறவைகளை இந்தக் கண்மாயில் ஆண்டு முழுவதும் பார்க்க முடியும். செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான பறவைகள் வலசை காலங்களில் 12 ஆயிரம் எண்ணிக்கையிலான பறவைகளை பார்க்க முடியும். 155 வகையான பறவைகள், இந்த கண்மாயில் இருப்பதை இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை பறவையியல் ஆர்வலர் ரவீந்திரன் நடராஜனும், அவரது குழுவினரும் கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு செய்து ஆவணப்படுத்தியுள்ளனர்.