புயல் நிவாரண நிதியை 4 மடங்கு உயர்த்தி வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்
புயல் நிவாரண நிதி வழங்குவதிலும் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. முதல்வர் ஸ்டாலின் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண உதவிகளை நான்கு மடங்கு உயர்த்திக் கொடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: புயல் நிவாரண நிதி வழங்குவதிலும் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. முதல்வர் ஸ்டாலின் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண உதவிகளை நான்கு மடங்கு உயர்த்திக் கொடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு, மருத்துவர்கள் பதவி உயர்வு, மின் கட்டணம் செலுத்தும் முறை, நீட் தேர்வு ரத்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது என அனைத்துப் பிரச்சினைகளிலும் இரட்டை வேடம் போடுவதில் திமுகவுக்கு நிகர் திமுகதான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அந்த வகையில், தற்போது ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் திமுக இரட்டை வேடத்தை போட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.