மனைவியை அடிப்பது கணவனின் உரிமையா?

சென்னை மாநகரில் பிறந்து, வளர்ந்து, படித்த என் தோழிகள் திருமணமாகி, கணவரின் அடி உதையைப் பொறுத்துப் போகிறார்கள் என்பதைச் சற்றும் நம்ப முடியவில்லை.

மனைவியை அடிப்பது கணவனின் உரிமையா?

ஜெர்மனியில் தேனிலவைக் கொண்டாட புதுமணத் தம்பதி சுகன்யாவும் அசோக்கும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) சென்றிருந்தனர். ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய இருவரும் ஹோட்டல் வாசலில் காருக்காகக் காத்திருந்த போது, அங்கிருந்த ஜெர்மானியர் ஒருவர் சுகன்யாவைப் பார்த்து, “யூ லுக் வெரி பியூட்டிஃபுல் இன் திஸ் இண்டியன் டிரெஸ்” (நீங்கள் இந்த இந்திய உடையில் மிக அழகாக இருக்கிறீர்கள்) என்று சொன்னார். அதற்கு நன்றி கூறிவிட்டு திரும்பிய சுகன்யாவுக்கு விழுந்தது கன்னத்தில் ஒரு அறை. அறைந்தது அவளுடைய கணவன் அசோக். சற்றும் எதிர்பாராமல் வந்த அடியின் அதிர்ச்சியில் உறைந்த சுகன்யா தான் செய்த தவறு என்ன என்று புரியாமல் நின்றாள். “எவனோ ஒருவன் உன்னைப் புகழ்ந்ததற்கு நன்றி வேறு சொல்கிறாயா?” என்று அனைவர் முன்பும் திட்டித் தீர்த்துவிட்டு மீண்டும் ரூமுக்கே கோபமாகத் திரும்பச் சென்றான் அசோக். கண்ணீர் மல்க அவன் பின்னால் ஓடினாள் சுகன்யா. பல கனவுகளோடு அடியெடுத்து வைத்த புதுவாழ்க்கையின் ஆரம்பத்திலேயே நடந்த இந்த நிகழ்வைத் திருமணமாகி 12 வருடங்கள் ஆகியும் சுகன்யாவால் மறக்க முடியவில்லை. இது சினிமாவில் பார்க்கும் காட்சிபோலத் தோன்றினாலும் உண்மையாக என் தோழிக்கு நடந்தது என்பதை என்னாலும் நம்ப முடியவில்லை.

கன்னத்தில் விழுந்த அறை