அதானி போன்ற பெரு நிறுவனங்களுக்கு ‘ஸ்மார்ட் மீட்டர்’ ஒப்பந்தத்தை வழங்கக் கூடாது: அன்புமணி

ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்காக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கோரப்பட்ட அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளையும் மின்வாரியம் ரத்து செய்ய வேண்டும். மின்வாரியமே வெளிப்படையான போட்டி ஏல முறையில் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்து மின் இணைப்புகளுக்கு பொருத்த வேண்டும்.

அதானி போன்ற பெரு நிறுவனங்களுக்கு ‘ஸ்மார்ட் மீட்டர்’ ஒப்பந்தத்தை வழங்கக் கூடாது: அன்புமணி

சென்னை: “ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தி, பராமரிப்பதில் அதானி போன்ற பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும், அதற்கு தமிழக அரசு துணை போவதையும் அனுமதிக்க முடியாது.” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பிற்கான ஒப்பந்தத்தை அதானி குழும நிறுவனத்துக்கு தமிழ்நாடு மின்வாரியம் வழங்கக் கூடும் என்று வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட காலத்துக்கும் இன்றைக்கும் இடையிலான சூழல்கள் மிகப்பெரிய அளவில் மாறியிருக்கும் நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் குறிப்பிடப்பட்ட விலையில் ஸ்மார்ட் மீட்டர்களை வாங்கக்கூடாது.