சர்வரில் திடீர் கோளாறு: ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க, ஆன்லைன் டிக்கெட் எடுக்க உதவும் சர்வர் செவ்வாய்க்கிழமை காலை திடீரென முடங்கியது. இதனால், பயணிகள் ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்க முடியாமல் தவிர்த்தனர்.
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க, ஆன்லைன் டிக்கெட் எடுக்க உதவும் சர்வர் செவ்வாய்க்கிழமை காலை திடீரென முடங்கியது. இதனால், பயணிகள் ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்க முடியாமல் தவித்தனர். மேலும், டிக்கெட் கவுன்ட்டரில் வரிசையில் நெடுநேரம் காத்திருந்து டிக்கெட் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் சுமார் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். மெட்ரோ ரயில் பயணிகளுக்கு நம்பகத் தன்மை மற்றும் பாதுகாப்பான பயண வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறது. இதனால், மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது.