தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் நேற்று பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தஞ்சாவூர்/ கும்பகோணம்/ நாகப்பட்டினம்/ திருவாரூர்/ மயிலாடுதுறை/ காரைக்கால்: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் நேற்று பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய இடைவிடாது மழை பெய்ததால், பொதுமக்கள் பலரும் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கினர்.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலவெளி ஊராட்சியில் பாலகிருஷ்ணாநகர் விரிவாக்கம், சக்தி நகர் குடியிருப்பு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலக்கடலை விதைப்பு செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதேபோல, சம்பாவில் பூக்கும் தருணத்தில் உள்ள நெற்பயிருக்கு பாதிப்பையும், தாளடி பயிரில் பூச்சித் தாக்குதலையும் ஏற்படுத்தும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.