“நெல்லையில் ஆக்கிரமிப்புகளால் மழைநீர் தேங்கி பாதிப்பு” - சொல்கிறார் அமைச்சர் கே.என்.நேரு
திருநெல்வேலி மாநகரில் ஆக்கிரமிப்புகளின் காரணமாகவே மழைநீர் தேங்கி வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தார்.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் ஆக்கிரமிப்புகளின் காரணமாகவே மழைநீர் தேங்கி வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தார்.
திருநெல்வேலியில் பெய்த கனமழையால் மாநகரில் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. இந்நிலையில் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு மழை நீர் தேங்கிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஆய்வு மேற்கொண்டார். திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலைய பகுதியில் தேங்கியிருந்த மழைநீரை பார்வையிட்ட அவர், வருங்காலங்களில் பேருந்து நிலையம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மழைநீர் வடிகால் பகுதிகளை சீரமைப்பது, வடிகால் அமைப்பது தொடர்பான பல்வேறு அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் அதிகாரிகளுக்கு வழங்கினார்.