ராகுல் காந்தி முன்வைக்கும் அரசியல் எடுபடுமா?
துருவ நட்சத்திரத்தின் கனவு இது- காங். செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி; மண் குதிரையால் ஆற்றைக் கடக்க முடியாது- இந்திய கம்யூ.வின் சி.மகேந்திரன்.
துருவ நட்சத்திரத்தின் கனவு இது - ஜோதிமணி
குத்துச்சண்டைக் களம் போலாகிவிட்ட இந்தியத் தேர்தல் களத்தில் நடக்கும் தனிநபர் அவதூறுப் பிரச்சாரங்கள், பிரிவினைவாதப் பேச்சுகள், மலிவான பொய்கள், போலியான வாக்குறுதிகளுக்கு இடையே மிக ஆழமான தொலைநோக்குச் சிந்தனை ஒன்றை முன்வைத்துள்ளார் ராகுல் காந்தி. நமது அரசியல், நிர்வாக அமைப்பை அடியோடு மாற்ற வேண்டும் என்பதே அது. ஒவ்வொரு முறையும் பிரச்சினைகள் ஏற்படும்போது, நாம் ஆட்களை மாற்றினால் சரியாகிவிடும் என்று நினைக்கிறோம். மாற்றவும் செய்கிறோம். சிறிது காலத்துக்குப் பிறகு மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடுவதைப் பார்த்துக் கோபமும் சலிப்பும் ஏற்படுகிறது. ஆனால், அமைப்பு மாறினால் ஆட்களும் மாறித்தான் ஆக வேண்டும்.