ஆங்கிலம் இல்லாமல் இந்தியர்களால் சாதிக்க முடியாதா?
"ஆங்கிலத்தைத் தடைசெய்யக் கோருவதன் மூலம் உத்தரப் பிரதேசத்தைக் கற்காலத்துக்கு அழைத்துச் செல்கிறார் முலாயம்" என்று ஒரு ஆங்கில நாளேடு கண்டித்தது.
“இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் ஆங்கிலத்தில் பேசக் கூடாது எனத் தடை விதிக்க வேண்டும்” என்று உத்தரப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில், சில வாரங்களுக்கு முன் பேசினார் சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ். “நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல. தாய்மொழியைப் பயன்படுத்தும் நாடுகள் நம்மைவிட முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால், இந்தியாவில்தான் - ஆங்கிலம் தங்களுடைய தாய்மொழியல்ல என்றாலும் - அதில் பேசுவதில் பெருமை கொள்கிறார்கள்” என்றும் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.
“ஆங்கிலத்தைத் தடைசெய்யக் கோருவதன் மூலம் உத்தரப் பிரதேசத்தைக் கற்காலத்துக்கு அழைத்துச் செல்கிறார் முலாயம்” என்று ஒரு ஆங்கில நாளேடு கண்டித்தது. “இது மிகவும் பிற்போக்குத்தனமான சிந்தனை, ஆங்கிலத்தின் மீதுள்ள வெறுப்பு காரணமாகச் சில மாநிலங்கள் பின்தங்கிய நிலைமையிலேயே இருக்கின்றன, மேற்கு வங்கம் அதற்கு நல்ல உதாரணம். தகவல் தொழில்நுட்பத் துறை இந்தியாவில் வளர்வதற்கு ஆங்கில மொழியறிவே காரணம்” என்று இன்னொரு நாளேடு எழுதியது.