கனமழை, மூடுபனி தாக்கம்: சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் தற்காலிக மூடல்
கனமழை மற்றும் மூடுபனியின் தாக்கத்தினால் சபரிமலைக்குச் செல்லும் புல்மேடு, பெரிய பாதை வனப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மாற்றுப் பாதையில் சென்று வருகின்றனர்
தேனி: கனமழை மற்றும் மூடுபனியின் தாக்கத்தினால் சபரிமலைக்குச் செல்லும் புல்மேடு, பெரிய பாதை வனப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மாற்றுப் பாதையில் சென்று வருகின்றனர். மேலும் தொடர் மழை காரணமாக பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் ஆற்றில் இறங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புயல் தாக்கம் காரணமாக சபரிமலையில் கடும் மழையும், 40 கி.மீ. வேகத்தில் காற்றும் வீச வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்துக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் (நவ.30) மாலையில் இருந்து சபரிமலை, நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.