தென்காசியில் விவசாய நிலங்களுக்குள் படையெடுக்கும் யானைகள்: நிரந்தர தீர்வுக்கு வழி என்ன?
விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டது தென்காசி மாவட்டம். கடையம், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, வாசுதேவநல்லூர் வட்டாரங்களில் பெரும்பாலான விவசாய நிலங்கள் இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளன.
தென்காசி: விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டது தென்காசி மாவட்டம். கடையம், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, வாசுதேவநல்லூர் வட்டாரங்களில் பெரும்பாலான விவசாய நிலங்கள் இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளன. மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் காட்டுப் பன்றிகள் தொல்லை அதிகமாக இருக்கும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் யானைகள், கரடிகள், சிறுத்தைகள் தொந்தரவுகள் கூடுதலாக உள்ளன. அதிலும் வடகரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் தொல்லை நீண்ட காலமாக நீடிக்கிறது. யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களில் புகுந்து நெல், வாழை, தென்னை, மா போன்றவற்றை மட்டுமின்றி விவசாய நிலங்களில் உள்ள தண்ணீர் குழாய்கள், வேலிகளையும் உடைத்து சேதப் படுத்துகின்றன.
வனத் துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினாலும் மீண்டும் அவை விவசாய நிலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதனால் விவசாயத்தையே நம்பியுள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டக் கால கோரிக்கையாக உள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, "யானைகள் வருகையை தடுக்க மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி கூடுதலாக 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சோலார் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகழியை தூர்வாரி ஆழப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல், வாழை, தென்னை, மா போன்றவற்றை யானைகள் விரும்பி உண்ணும். எனவே, இவற்றைத் தேடி யானைகள் வருகின்றன. ருசியான தீவனம் கிடைப்பதால் மீண்டும் மீண்டும் யானைகள் வருகின்றன.