“தேங்கி நிற்கிற நிலையில் விசிகவும் நானும் இல்லை” - விஜய் கருத்துகளுக்கு திருமாவளவன் எதிர்வினை
புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்பது நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. கட்சியின் நலன், கூட்டணியின் நலன் கருதி சனாதன சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல் இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு எடுத்த முடிவு”
சென்னை: “விஜய்யின் மனது மேடையில் இல்லை. என்னை நோக்கியே இருந்திருக்கிறது. புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்பது நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. கட்சியின் நலன், கூட்டணியின் நலன் கருதி சனாதன சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல் இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு எடுத்த முடிவு” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நேற்று நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்வில், 'திருமாவளவன் மனது முழுக்க முழுக்க எங்களோடு தான் இருக்கும்' என்று தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “விஜய்யின் மனது மேடையில் இல்லை. என்னை நோக்கியே இருந்திருக்கிறது என்பதை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் மேடையில் இருந்தாலும், நான் எங்கே இருக்கிறேன் என்பதை எண்ணிக்கொண்டே இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதில் அவருக்கு வருத்தம். ஓர் ஆதங்கம், அதனால் அவர் அவ்வாறு பேசியிருக்கிறார். மற்றபடி எனக்கு எந்த நெருடலும் இல்லை.