புதுச்சேரி அருகே புயல் நாளை கரையை கடக்கும் - சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’
நாளை (நவ.30) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகத்தில் காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே 30-ம் தேதி மதியம் புயலாக கடக்கக்கூடும். இதன் காரணமாக, நாளை (நவ.30) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேற்று (நவ.28) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.29) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, நாகபட்டினத்திலிருந்து கிழக்கே சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 340 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 380 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.