புயல் நிலவரம்: தமிழகத்தில் நவ.30 வரை மழை எச்சரிக்கை; மீனவர்கள் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தல்
சென்னையில் இருந்து தெற்கு - தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக் கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் நவம்பர் 30 வரை மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம்.
சென்னை: சென்னையில் இருந்து தெற்கு - தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக் கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் நவம்பர் 30 வரை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி மாலை வரை மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேற்று (நவ.26) காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.27) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, இலங்கை – திரிகோணமலையிலிருந்து கிழக்கு - தென்கிழக்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு - தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.