போக்குவரத்து ஊழியர் ஓய்வூதிய பலனுக்கு ரூ.372 கோடி: சட்டப்பேரவையில் முதல் துணை பட்ஜெட் தாக்கல்
சட்டப்பேரவையில் இந்த நிதி ஆண்டுக்கு ரூ.3,531 கோடிக்கான முதல் துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவையில் இந்த நிதி ஆண்டுக்கு ரூ.3,531 கோடிக்கான முதல் துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு பண பலன் வழங்க ரூ.372 கோடியும், ஆவின் நிறுவனத்துக்கு மானியமாக ரூ.70 கோடி மானியமாகவும் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று பேசியதாவது: 2024-25-ம் ஆண்டுக்கான இந்த துணை மதிப்பீடுகள் ரூ.3,531.05 கோடி நிதியை ஒதுக்க வழிவகை செய்கின்றன. 2024-25-ம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, புதிய பணிகள், புதிய துணை பணிகளுக்கு ஒப்பளிக்கப்பட்ட இனங்களுக்கு, சட்டப்பேரவையின் ஒப்புதலை பெறுவதும், எதிர்பாரா செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்ட தொகையை அந்த நிதிக்கு ஈடுசெய்வதும் இந்த துணை மானிய கோரிக்கையின் நோக்கம்.