'மாற்றாந்தாய் மனப்பான்மை' - தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எப்போது?
உலக அளவில் மீன் உற்பத்தியில் இந்தியா 2-வது இடம் வகிக்கிறது. இதில், தமிழகத்தில் திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரை 1,076 கி.மீ. தொலைவுக்கு 14 கடலோர மாவட்டங்களில் 608 மீனவக் கிராமங்கள் உள்ளன.
திருச்சி: உலக அளவில் மீன் உற்பத்தியில் இந்தியா 2-வது இடம் வகிக்கிறது. இதில், தமிழகத்தில் திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரை 1,076 கி.மீ. தொலைவுக்கு 14 கடலோர மாவட்டங்களில் 608 மீனவக் கிராமங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 8,500 விசைப்படகுகள், 41,000 பைபர் படகுகள் மூலம் சுமார் 10 லட்சம் பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மீனவர்களுக்காக டீசல் மானியம், மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்கள், தூண்டில் வளைவு, படகு நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகள், திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செய்து கொடுத்தாலும், மீனவர்களின் துயரம் இன்றளவும் தீர்ந்ததாக இல்லை.
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், மீண்டும் கரை திரும்புவோமா என்ற அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடலில் எல்லைக்கோடுகளை நிர்ணயிக்க முடியாது. காற்று வீசும் பாதையில் இழுத்துச் செல்லும் படகுகள், தமிழக பகுதியில் மீன்பிடித்தாலும்கூட எல்லைத் தாண்டியதாக கூறி கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்துக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.