விவாதம்: பெண்களைத் துரத்தும் ஆடைக் கட்டுப்பாடு
பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. அங்கே மதத்தின் பெயரால் பிற்போக்குத்தனங்கள் வலிந்து திணிக்கப்பட்டு வருகின்றன
பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. அங்கே மதத்தின் பெயரால் பிற்போக்குத்தனங்கள் வலிந்து திணிக்கப்பட்டு வருகின்றன. இந்த சட்டதிட்டங்களை அமல் செய்து வந்த மன்னர் அப்துல்லா 90 வயதில் இறந்துவிட்டார். துக்கம் கேட்பதற்காக இந்தியப் பயணத்தைப் பாதியில் முடித்துக்கொண்டு கிளம்பினார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
வழக்கமாக அணியும் மேற்கத்திய ஆடையிலேயே இந்தியாவிலிருந்து கிளம்பினார் மிஷேல் ஒபாமா. சவுதி அரேபிய மண்ணில் இறங்கியதும் அவரது உடை மாறிவிட்டது. முழுக்கப் போர்த்தப்பட்ட ஆடைக்கு மேலே, பெரிய அங்கி ஒன்றும் மாட்டியிருந்தார். தலையில் அணியச் சொன்ன ஸ்கார்ஃபை மட்டும் மறுத்துவிட்டார். எல்லோரிடமும் ஒபாமா கை கொடுத்தார். அருகில் இருந்த மிஷேல் கையை நீட்டியபோது, ஓரிருவரைத் தவிர, மற்றவர்கள் கை கொடுக்கவில்லை. சவுதி அரேபியாவில் இருந்த நான்கு மணி நேரமும் மிஷேல் இயல்பாக இருக்கவில்லை. அவரது சங்கடம் முகத்தில் தெரிந்தது. சவுதி அரேபியத் தொலைக்காட்சிகள் மிஷேலை மட்டும் இருட்டடிப்புச் செய்ததாகச் செய்தி வெளியானது. சமூக வலைத்தளங்களில் மிஷேல் ஸ்கார்ஃப் அணியாததைப் பெரிய குற்றமாக விவாதித்தார்கள்.