“இடஒதுக்கீட்டில் ‘ஓபிசி’க்கு மட்டும் பாகுபாடு ஏன்?” - மாநிலங்களவையில் அன்புமணி கேள்வி

ஓபிசிக்களின் மக்கள்தொகையை மட்டுமின்றி, அவர்களின் சமூக நிலையையும் அறிந்துகொள்ள அரசு தயங்குவது ஏன்? என்று பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

“இடஒதுக்கீட்டில் ‘ஓபிசி’க்கு மட்டும் பாகுபாடு ஏன்?” - மாநிலங்களவையில் அன்புமணி கேள்வி

புதுடெல்லி: “பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களில் சாதி என்ற ஒரே ஒரு பத்தியை சேர்க்க வேண்டியது மட்டும் தான். ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை நாம் மேற்கொள்ளும் மக்கள்தொகை கணக்கெடுப்பில், பட்டியலினத்தவரை குறிப்பிட ஒரு பத்தி உள்ளது, பழங்குடியினரை குறிப்பிட ஒரு பத்தி உள்ளது, சிறுபான்மையினரை குறிப்பிட ஒரு பத்தி உள்ளது. அதேபோல், ஓபிசி-க்களுக்கும் ஒரு பத்தி சேர்க்க வேண்டும். அத்தகைய ஒரு பத்தியை சேர்த்து ஓபிசிக்களின் மக்கள்தொகையை மட்டுமின்றி, அவர்களின் சமூக நிலையையும் அறிந்துகொள்ள அரசு தயங்குவது ஏன்?” என்று பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் பேசியது: "இடஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பது, இரண்டாவது கிரீமிலேயர், மூன்றாவது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, மேலும் பல பிரச்சினைகள் குறித்து பேச வேண்டியிருந்தாலும், நேரமின்மை காரணமாக இந்த விசயங்கள் குறித்து மட்டும் பேச விரும்புகிறேன். நாம் எதற்காக இடஒதுக்கீட்டுக்கு 50% உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும்? அதற்காக இந்த நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு நிறைவேற்றினோமா, இல்லை. 1962-63 ஆம் ஆண்டில் பாலாஜி vs மைசூர் மாகாண அரசு குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், பின்னர் 1993-ம் ஆண்டில் இந்திரா சஹானி வழக்கில் உச்சநீதிமன்றம் அதை உறுதி செய்ததன் அடிப்படையிலும் இதை நாம் பயன்படுத்துகிறோம். இதில் நாடாளுமன்றத்துக்கு எந்த தொடர்பும் இல்லை.