காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் 344 ஏரிகள் முழுமையாக நிரம்பின
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டதில் மொத்தம் 344 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
காஞ்சிபுரம்/குன்றத்தூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டதில் மொத்தம் 344 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தின் நீர்வளத் துறை பராமரிப்பில் உள்ள 528 ஏரிகளில் 103 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 163 ஏரிகள் 75 சதவீதமும், 160 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் நீர் நிரம்பியுள்ளன. இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 10 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும், 78 ஏரிகள் 75 சதவீதமும், 124 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் நிரம்பியுள்ளன.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மேலும் சில ஏரிகள் விரைவாக நிரம்பும் நிலை உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. நேற்று காலை 6.00 மணி நிலவரப்படி ஏரியின் மொத்த நீர்மட்டமான 24 அடியில் 20.07 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது.