கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழையால் மக்கள் பாதிப்பு - ஊத்தங்கரையில் 50 செ.மீ மழை பதிவு
ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணையில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த கனமழையால், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியதால் வெள்ளக்காடானது. பாம்பாறு அணையில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதனால், விழுப்புரம், திருவண்ணாமலையை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்தது. நேற்று பிற்பகலில் இருந்து இன்று காலை வரை இடைவிடாத மழை பெய்த நிலையில், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி சுற்றுவட்டாரங்களில் பெய்த மழையால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழக்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.