கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகளை 2025 ஏப்ரலுக்குள் முடிக்க ரயில்வே நிர்வாகம் திட்டம்
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, கடந்த ஜனவரி இறுதியில் திறக்கப்பட்டது.
சென்னை: கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, கடந்த ஜனவரி இறுதியில் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்லும் விதமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், புறநகர் மின்சார ரயில் சேவையை பேருந்து நிலையத்துடன் இணைக்கும் விதமாகவும் தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, ரூ.20 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.