சாத்தனூர் அணை நீர் திறப்பு பற்றி பொய்யான தகவல் பரப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சி: துரைமுருகன்

சாத்தனூர் அணை நீர் திறப்பு பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்கள் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். 

சாத்தனூர் அணை நீர் திறப்பு பற்றி பொய்யான தகவல் பரப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சி: துரைமுருகன்

சென்னை: “நள்ளிரவு நேரத்தில் கணிக்க முடியாத அளவுக்கு சாத்தனூர் அணையில் நீர் வந்து கொண்டிருந்தது. 5-வது முன்னெச்சரிக்கை அறிவிப்புக்கு பிறகும் நீர் வரத்து குறையாமல் மிக அதிக அளவில் இருந்தது. அந்த நேரத்தில் அணையில் இருந்து மிக அதிக அளவாக 1,80,000 கன அடி தண்ணீரை திறந்துவிடாமல் போயிருந்தால், அணைக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டு 7 டி.எம்.சி தண்ணீரும் வெளியேறியிருக்கும். அதனால் ஏற்படும் பாதிப்புகள் எல்லாம் கணக்கில் அடங்காது. ஆறாத துயரமாக அது மாறியிருக்கும். சாத்தனூர் அணை நீர் திறப்பு பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்கள்.” என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

ஃபெஞ்சல் புயலால் அதிகரித்த நீர்வரத்து: இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல், திடீரென விநாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீரை வெளியேற்றியதால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்’ என உண்மைக்கு மாறான தகவல் பரப்பப்படுகிறது. ஃபெஞ்சல் புயலால் நீர்பிடிப்பு பகுதியில் பெரும் மழை பொழிவால் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அணையின் முழு கொள்ளளவான 119 அடியை நெருங்கியது. தண்ணீர் வரத்தை முன்கூட்டியே கணித்து, அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வந்த தண்ணீர், தென் பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.