டிச.1-ல் சென்னை திரும்புகிறார் அண்ணாமலை
அரசியல் படிப்பை மேற்கொள்ள லண்டன் சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் 1-ம் தேதி சென்னை திரும்பவுள்ளார்.
அரசியல் படிப்பை மேற்கொள்ள லண்டன் சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் 1-ம் தேதி சென்னை திரும்பவுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத காலம் சர்வதேச அரசியல் மேற்படிப்பை படிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார். அவருக்கு பதிலாக தமிழக பாஜகவை வழிநடத்த மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு செயல்பட்டு வருகிறது. லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அண்ணாமலை, அவ்வப்போது தமிழகத்தில் நடைபெறும் அரசியல் உள்ளிட்ட சூழல்களுக்கான கருத்துகளையும் பதிவு செய்து வருகிறார். அவர் நவ.28-ம் தேதி திரும்புவதாக இருந்த நிலையில், பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அவர் டிச.1-ம் தேதி அதிகாலை சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அன்றைய தினம் கோவையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என தெரிகிறது. டிச.1-ம் தேதி அதிகாலை 1 மணியளவில் சென்னை திரும்பும் அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்க பாஜக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து 2-ம்தேதி தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் அவருக்கான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 மாத காலத்துக்குப் பிறகு தமிழகம் திரும்பும் அண்ணாமலையின் அடுத்தடுத்த நகர்வுகள் மூலம் வரும் நாட்களில் அரசியல் களம் பரபரப்பாகும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.