தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், புயல் நிலை என்ன? - பாலச்சந்திரன் விளக்கம்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மேற்கு பகுதியில் நல்ல மேகக்கூட்டங்கள் உருவாகியிருக்கிறது. கிழக்குப் பகுதியில் இருந்து மேகக்கூட்டங்களுக்கு காற்று சென்று கொண்டிருக்கிறது. இதனால், இது புயலாக உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம்
சென்னை: “ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மேற்கு பகுதியில் நல்ல மேகக்கூட்டங்கள் உருவாகியிருக்கிறது. கிழக்குப் பகுதியில் இருந்து மேகக்கூட்டங்களுக்கு காற்று சென்று கொண்டிருக்கிறது. இதனால், இது புயலாக உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம். அது கரையைக் கடக்கும் பகுதி இன்னும் கணிக்கப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி, அது கடலோரப் பகுதி கரைக்கு இணையாக, சுமார் 150-லிருந்து 200 கி.மீட்டர் தொலைவில் நிலை கொள்ளக்கூடும். அதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று (நவ.26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்ந்து, நாளை (நவ.27) மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறக்கூடும். அதனைத் தொடர்ந்து தமிழக கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் மழை தொடரக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை (ரெட் அலர்ட்) பெய்யக்கூடும்.