தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளையும் அமைதியாக்கிய ‘அதானி மந்திரம்’!
அதானி குழுமத்தின் லஞ்சம் தொடர்பாக அமெரிக்காவிலிருந்து எழுந்த குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது, இருப்பினும் தமிழகத்தில் ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் அடக்கியே வாசிக்கின்றன.
அதானி குழுமத்தின் லஞ்சம் தொடர்பாக அமெரிக்காவிலிருந்து எழுந்த குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது, இருப்பினும் தமிழகத்தில் ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் அடக்கியே வாசிக்கின்றன. அமெரிக்காவில் சோலார் பவர் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன.
ஆனால், இதை அடியோடு மறுத்துள்ளது அதானி குழுமம். இதில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும், அதானியை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளில் அதிர்ச்சி தரும் விதமாக தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் ஜம்மு காஷ்மீரின் மின்வாரியங்கள், மத்திய அரசின் சோலார் பவர் கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்காக 250 மில்லியன் டாலர் அளவுக்கு அதானி குழுமம் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.