நீலகிரியை ஆக்கிரமிக்கும் களைச் செடிகள் - பாதிப்பு என்ன?

பார்த்தீனியம் எனப்படும் அயல்நாட்டு களைச் செடியானது, 1950-களில் கோதுமையுடன் கலந்து இந்தியாவுக்குள் ஊடுருவியது. இந்த செடிகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவி கிடக்கின்றன.

நீலகிரியை ஆக்கிரமிக்கும் களைச் செடிகள் - பாதிப்பு என்ன?

மஞ்சூர்: முதுமலை புலிகள் காப்பகத்தை அச்சுறுத்தி வரும் பார்த்தீனியம் மற்றும் லேண்டானா களைச் செடிகள், தற்போது நீலகிரி மாவட்டத்தின் தெற்கு பகுதிகளிலும் பரவியுள்ளதால், வன விலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு உணவு பற்றாக்குறை அபாயம் ஏற்பட்டுள்ளது. பார்த்தீனியம் எனப்படும் அயல்நாட்டு களைச் செடியானது, 1950-களில் கோதுமையுடன் கலந்து இந்தியாவுக்குள் ஊடுருவியது. இந்த செடிகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவி கிடக்கின்றன.

இந்த தாவரம் மனிதர்களுக்கு சுவாச கோளாறுகள், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. உடல் மீது படும்போது ஒருவிதமான அரிப்பு ஏற்படுகிறது. பார்த்தீனியம் செடியின் விதைகள் காற்றில் பரவி செழித்து வளர்கின்றன. இந்த செடி வளரும் இடங்களில் வேறு எந்த தாவரம், புற்கள்கூட வளர்வதில்லை. இதனை உட்கொள்ளும் கால்நடைகளின் பாலில் கசப்பு தன்மை உண்டாகிறது. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் அபரிமிதமாக காணப்பட்ட இந்த செடிகள், தற்போது மாவட்டத்தின் தெற்கு பகுதிகளிலும் பரவியுள்ளன.