ஈர நில பறவைகளைக் கண்காணிக்கும் பெண்கள் @ கோவை

இந்தியாவைப் பொறுத்தவரை வேளாண்மைத் துறையில் உணவு பாதுகாப்பில் தொடங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரையில் பெண்களின் பங்களிப்பு அத்தியாவசியமாகவும், அவசியமாகவும் உள்ளது.

ஈர நில பறவைகளைக் கண்காணிக்கும் பெண்கள் @ கோவை

கோவை: இந்தியாவைப் பொறுத்தவரை வேளாண்மைத் துறையில் உணவு பாதுகாப்பில் தொடங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரையில் பெண்களின் பங்களிப்பு அத்தியாவசியமாகவும், அவசியமாகவும் உள்ளது. உலகளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மேதா பட்கர், வந்தனா சிவா ஆகியோர் பெரிய அளவில் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். கோவையில் சித்தார்த் பவுண்டேஷன் என்ற அமைப்பு பெண்களை மட்டும் மையப்படுத்தி ஈர நில பறவைகள் கண்காணிப்பை கடந்த 2023 மே முதல் செயல்படுத்தி வருகிறது.

இதுகுறித்து, சித்தார்த் பவுண்டேஷன் தன்னார்வலர் ஹர்ஷிதா கூறியதாவது: இயற்கையை புரிந்து கொள்வதற்கும், அவர்களைச் சுற்றியுள்ள இயற்கையைப் பாராட்டுவதற்கும் இயற்கையின் விழிப்புணர்வுப் பயணத்தைத் தொடங்கவும் அனைத்துத் துறைகளையும் சேர்ந்த பெண்களைக் கொண்டு வருவது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். குறிப்பாக பெண் சமூகத்துக்கான இயற்கை கல்வி முயற்சியாகும். மகளிர் பங்கேற்கும் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு மே 2023 இல் சர்வதேச பல்லுயிர் தினத்தன்று தொடங்கப்பட்டது. கோவை நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 9 குளங்களை கண்காணித்துள்ளது. இந்த சமூக அணுகுமுறையின் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம், இயற்கையில் தன் உணர்வு உள்ள தனிநபர்களை உருவாக்குவதாகும்.