கூடலூர் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் யானைகளை கண்காணிக்கும் ‘ஏஐ’

இந்தியாவில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் ஏற்படும் பகுதிகளில், நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் முக்கிய இடத்தில் இருக்கிறது. காடு அழிப்புகளால் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவே, அவற்றை தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் யானைகள் நுழைகின்றன.

கூடலூர் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் யானைகளை கண்காணிக்கும் ‘ஏஐ’

கூடலூர்: இந்தியாவில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் ஏற்படும் பகுதிகளில், நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் முக்கிய இடத்தில் இருக்கிறது. காடு அழிப்புகளால் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவே, அவற்றை தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் யானைகள் நுழைகின்றன. அப்போது, மனிதர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால், மனித உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேவேளையில், மின்வேலி, திறந்தவெளி கிணறுகள் உள்ளிட்ட மனித தவறுகளால், யானைகள் உயிரிழப்பும் நிகழ்கின்றன. யானை - மனித எதிர்கொள்ளல்களை தடுக்க, கூடலூரில் வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், பிரச்சினைக்கான தீர்வு கிடைத்த பாடில்லை. இந்நிலையில், ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை கண்காணித்து, எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்பும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் ஒன்றான கூடலூர் வனக்கோட்டம் ஓவேலி பகுதியில், முதல்கட்டமாக 5 செயற்கை நுண்ணறிவு கேமராக்களைப் பொருத்தியுள்ளனர்.