மீனவர்கள் வலையில் சிக்கிய 800 கிலோ எடை கடற்பசு @ அதிராம்பட்டினம்
அதிராம்பட்டினம் அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய 800 கிலோ எடையிலான கடல்பசு மீண்டும் உயிருடன் கடலுக்குள் விடப்பட்டது. இதையடுத்து, மீனவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டத்தில் நடுக்கடலில் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் வலையில் சுமார் 800 கிலோ எடை கொண்ட அரிய வகை கடற்பசு சிக்கியது. பின்னர் வனத்துறையினரின் அறிவுறுத்தலின்பேரில் நல்ல நிலையில், உயிருடன் கடற்பசுவை மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் விட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 மீனவர்கள் இன்று அதிகாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது மீனவர் செல்லத்துரைக்கு சொந்தமான வலையை கடலில் விரித்து மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது சுமார் 800 கிலோ எடை கொண்ட 8 அடி நீளமும், 5 அடி அகலமும் கொண்ட அரிய வகை கடற்பசு ஒன்று சிக்கியது.