போக்குவரத்து நெரிசலில் திணறும் ஜிஎஸ்டி சாலை: நிரந்தர தீர்வு என்ன?
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இச்சாலையில் கடந்த 15 ஆண்டுகளில் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னை தி.நகருக்கு அடுத்தபடியாக தென் சென்னையில் குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரையிலான ஜிஎஸ்டி சாலை, வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இச்சாலையில் கடந்த 15 ஆண்டுகளில் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்பகுதி முழுவதும் வணிக நிறுவனங்கள் அதிகரித்திருந்தாலும் பெரும்பாலான கடைகளில் பார்க்கிங் வசதி இல்லை.
இந்த வணிக நிறுவனங்களுக்கு கட்டிட அனுமதி கொடுக்கும்போதே, பார்க்கிங் வசதி அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பார்க்கிங் வசதிக்கு ஒதுக்கப்பட வேண்டிய பகுதிகளில் வணிக நிறுவனங்களால் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஜிஎஸ்டி சாலையில் குரோம்பேட்டை - பல்லாவரம் வரையிலான 2 கி.மீ. தூரத்தில் செயல்படும் வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி செல்கின்றனர்.