‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் பாஜகவின் தோல்விகளை மறைக்கும் முயற்சி: முதல்வர் ஸ்டாலின் சாடல்

பழிவாங்கும் எண்ணத்துடனும், நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் மையமான பிரச்சினைகளை எதிர்கொள்வதில் பாஜக அடைந்துள்ள தோல்விகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பவும் இத்தகைய அடாவடி முயற்சியை மேற்கொள்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் பாஜகவின் தோல்விகளை மறைக்கும் முயற்சி: முதல்வர் ஸ்டாலின் சாடல்

சென்னை: “இந்திய அரசியலை என்றென்றைக்குமாக மாற்றியமைத்துவிடக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லை. ஆனாலும், பழிவாங்கும் எண்ணத்துடனும், நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் மையமான பிரச்சினைகளை எதிர்கொள்வதில் பாஜக அடைந்துள்ள தோல்விகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பவும் இத்தகைய அடாவடி முயற்சியை மேற்கொள்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றொழித்து, ஒற்றையாட்சி முறை எனும் பேரழிவுக்குள் நாட்டைத் தள்ளிவிடும் என்பதால், கூட்டாட்சியியலுக்கு எதிரானதும், நடைமுறைச் சாத்தியமற்றதுமான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கும். அதிபர் தேர்தல் நடத்துவது போல பொதுத்தேர்தல்களை நடத்தும் உள்நோக்கத்துடன் இத்திட்டத்தை மத்திய பாஜக அரசு திணிக்கிறது. இது நமது அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானதாகும்.