மேடையிலும் தாக்கம் செலுத்திய கதைகள்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ‘மேடை’ அரங்கில் இமையம் எழுதிய 4 சிறுகதைகளை வைத்து ‘இமையம் கதைகளோடு ஒரு மாலைப் பொழுது’ என்னும் மேடை நாடக நிகழ்ச்சி ஏப்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ‘மேடை’ அரங்கில் இமையம் எழுதிய 4 சிறுகதைகளை வைத்து ‘இமையம் கதைகளோடு ஒரு மாலைப் பொழுது’ என்னும் மேடை நாடக நிகழ்ச்சி ஏப்.27-ல் அரங்கேற்றப்பட்டது. ப்ரஸன்னா ராமஸ்வாமி நாடகமாக இயக்கித் தயாரித்திருந்தார்.
தனித்து வாழும், நடுத்தர வயதுப் பெண் சந்தோஷம், தவறான நோக்கத்துடன் தன்னைப்பின்தொடரும் இளைஞனிடம் தன் துயரம் மிகுந்த வாழ்க்கையையும் இந்தச் சமூகத்தின் பாலினப் பாகுபாடுகள் மீதான கோபத்தையும் கொட்டித் தீர்ப்பதுதான் ‘அணையும் நெருப்பு’கதை. கிட்டத்தட்ட ஓரங்க நாடகம்போன்ற இந்தக் கதையின் கனத்தைத் தன்அபாரமான நடிப்பால் தோள்களில் சுமந்துநிற்கிறார் கீதா கைலாசம். பேசிக்கொண்டிருக்கும்போதே கண்ணீர் சிந்தும் அளவுக்கு கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி வெளிப்படுத்திய விதத்தில் வியக்க வைக்கிறார். சந்தோஷத்தைப் பின்தொடரும் இளைஞராக ரோஷன், முக பாவனைகளால் கவனம் ஈர்க்கிறார்.