வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு
அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேற்று (டிச.18), தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (டிச.19) தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 12 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் வடதமிழக – தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.