“அரசு பணிக்காக மதம் மாறியவர்கள் மீது நடவடிக்கை” - அரசுக்கு தமிழக பாஜக வலியுறுத்தல்
அரசு பணிகளில் பட்டியலினத்தவர் இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை சரி பார்த்து, அரசு பணிக்காகவே மதம் மாறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் கூறியுள்ளார்.
சென்னை: “அரசு பணிகளில் பட்டியலினத்தவர் இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை சரி பார்த்து, அரசு பணிக்காகவே மதம் மாறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சுக்கு பேச்சு அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்.” என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “புதுச்சேரியைச் சேர்ந்தவர் சி.செல்வராணி. கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய இவர், புதுச்சேரி யூனியன்பிரதேச அரசின் கிளார்க் பணியிடத்துக்காக பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் எனக்கூறி விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றார். சாதிச் சான்றிதழ் சரிபார்ப்பின்போது அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து செல்வராணி, தனது தந்தை இந்து பட்டியலினத்தவர் என்பதால், தனக்கும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என சாதி சான்றிதழ் வழங்கக் கோரியுள்ளார். அவரது விண்ணப்பத்தை புதுச்சேரி அரசு அதிகாரிகள் நிராகரித்தனர்.செல்வராணியின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்தது.