அவதூறு வழக்குகளில் ஹெச்.ராஜாவுக்கான சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்தது நீதிமன்றம்!
பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், கனிமொழி எம்பி குறித்தும் அவதூறாக பேசிய வழக்குகளில் பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தலா 6 மாதம் சிறை தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
சென்னை: பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், கனிமொழி எம்பி குறித்தும் அவதூறாக பேசிய வழக்குகளில் பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தலா 6 மாதம் சிறை தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
பாஜக தமிழக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரான முன்னாள் எம்எல்ஏ ஹெச்.ராஜா கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது சமூக வலைதளப்பதிவில், “திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல தமிழகத்திலும் பெரியார் சிலை உடைக்கப்படும்” என பதிவிட்டு இருந்தார். இதேபோல கடந்த 2018 ஏப்ரலில் திமுக எம்பி கனிமொழி குறித்தும் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு இருந்தார். அதையடுத்து ஹெச்.ராஜாவுக்கு எதிராக திமுக நிர்வாகிகளும், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பிலும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டன. பெரியார் சிலை உடைப்பு குறித்து ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் போலீஸாரும், கனிமொழி்க்கு எதிரான புகார் குறித்து ஈரோடு நகர போலீஸாரும் ஹெச்.ராஜாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருந்தனர்.