மழையை எதிர்கொள்ளும் பணியில் தொய்வு: நெல்லையை மீண்டும் கதிகலங்க வைத்த வெள்ளம்
திருநெல்வேலி மாநகரில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை சரிவர மேற்கொள்ளாததால் கடந்த ஆண்டைப் போலவே தற்போதும் முக்கிய சாலைகள், கடைவீதிகள், கோயில்கள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை சரிவர மேற்கொள்ளாததால் கடந்த ஆண்டைப் போலவே தற்போதும் முக்கிய சாலைகள், கடைவீதிகள், கோயில்கள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
திருநெல்வேலியில் பருவமழை முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதற்காக பல்வேறு ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன. ஆங்காங்கே பணிகளும் நடைபெற்றன. ஆனால் மழைநீர் ஓடைகளும், கால்வாய்களும் மராமத்து செய்யப்படாமலும், தூர்வாரப்படாமலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலும் உள்ளதை கடந்த சில வாரங்களுக்குமுன் இந்து தமிழ் திசை, புகைப்படங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தது.