வட தமிழக மாவட்டங்களுக்கு கூடுதல் மீட்புக் குழுக்களை அனுப்புக: அன்புமணி ராமதாஸ்
வட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து இடங்களிலும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; தேவைப்பட்டால் கூடுதலாக மீட்புக் குழுக்களை அந்த பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும்.
சென்னை: “வட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து இடங்களிலும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; தேவைப்பட்டால் கூடுதலாக மீட்புக் குழுக்களை அந்த பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும்.” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் எதிர்பார்த்த வேகத்தில் கரையைக் கடக்காமல் பல மணி நேரம் ஒரே இடத்தில் நிலை கொண்டதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ மழை பெய்திருப்பதாகவும், இது கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத மழை என்றும் கூறப்படுகிறது. தருமபுரி மாவட்டம் அரூரில் 33 செ.மீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தலில் 32 செ.மீ, மாதம்பூண்டியில் 31 செ.மீ, சேலம் ஏற்காட்டில் 24 செ.மீ மழை கொட்டித்தீர்த்திருக்கிறது.