வானிலை முன்னறிவிப்பு: 15 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை கனமழை வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: 15 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை கனமழை வாய்ப்பு

சென்னை: ஃபெஞ்சல் புயல் இன்று (திங்கள்கிழமை) காலை மேலும் வலு குறைந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேற்று (டிச.1) காலை வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய “ஃபெஞ்சல்” புயல், நேற்று மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் , இன்று (டிச.2) காலை காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது. இது, செவ்வாய்க்கிழமை காலை தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

இதன் காரணமாக, இன்று (டிச.2) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் சமவெளிப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.