இம்மையில் செய்தது மறுமைக்கு ஆகுமா?

இன்றைய வாழ்வின் வலி முன்வினையின் பயன் என்பதும் இம்மை செய்தது மறுமைக்கு என்பதும் பண்டைத் தமிழர் சாடிய கருத்து

இம்மையில் செய்தது மறுமைக்கு ஆகுமா?

முற்பிறப்பின் வினைப்பயனால் இப்பிறப்பில் துன்பங்கள் தாக்குகின்றன என்கிற கோட்பாடு மெதுமெதுவாக வளர்ந்து, சிலப்பதிகாரக் காலத்தில் ‘ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்’ என்கிற எண்ணப்பாடு மேலோங்கி நின்றது. தமிழ்ச் சமூகத்தில் சிறுகச் சிறுக விதைக்கப்பட்ட கோட்பாடுகளை ஒதுக்கி, தம் காலத்துக்கும் முற்பட்ட தொல்தமிழர் உயர்சிந்தனைகளை நினைவூட்டிக் கொண்டேயிருந்தனர் சங்கப் புலவர்கள். இந்த நினைவூட்டல் இந்தக் காலத்திலும் தொடரவேண்டியிருப்பதுதான் தமிழ்ச் சமூகத்தின் வருத்தமிகு உண்மை.

‘இம்மை மாறி மறுமை ஆயினும் நீயாகியர் என்கணவனை; யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே’ என்று குறுந்தொகையும் (49), ‘கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்’ என்று கலித்தொகையும் (103), அடுத்த பிறவியில் பெண்கள் கைபிடிக்க விரும்பும் கணவன்மாரைப் பற்றிப் பாடுகின்றன. காதல் சொல்லும் அகப்பாடல்கள் மட்டுமல்லாமல், வீரம் சொல்லும் புறப்பாடல்களும் மறுமை வாழ்வு பற்றிப் பேசுகின்றன.