திருக்குறளை ‘பெஸ்ட் செல்லர்’ ஆக்கிய சொல்லோவியர்!

புறநானூற்றின் சூழியல் கவி எனப் புகழத் தக்க கபிலனின் நூறு பூக்கள் பாடலை மூச்சுவிடாமல் அடுக்கிச் சொல்லும் ஆற்றல் சிவகுமாருக்கே உரித்தான தனித்த நினைவாற்றலின் குன்றாத மலர்ச்சி.

திருக்குறளை ‘பெஸ்ட் செல்லர்’ ஆக்கிய சொல்லோவியர்!

எவ்வளவு செல்வமிருந்தாலும் எவ்வளவு புகழிருந்தாலும் 80 வயதில் சோர்ந்து விடுவதே பெரும்பாலான பிரபலங்களின் இயல்பு. காலவோட்டத்தில் பலர் மறக்கப்பட்டவர்களாகவும் அவர்கள் எங்கே வாழ்கிறார்கள் என்பதுகூடத் தெரியாமல் முதுமை அவர்களை முடக்கியிருக்கும். இந்த சட்டகத்துக்கு வெளியே நிற்கும் கம்பீரமும் ஒரு நதிபோல் எங்கும் இடை நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் கலையாளுமையும் இன்று 81வது பிறந்த நாளைக் கொண்டாடும் பன்முகக் கலைஞர் சிவகுமாருக்கு உண்டு.

திரை நடிப்பைக் கடந்து, ஓவியம், எழுத்து, பேச்சு என பல தளங்களில் தன்னுடைய தனித்த அடையாளத்தைப் பதிந்துகொண்டே வந்திருக்கும் சிவகுமார் 75 வயதைக் கடந்தபோது ‘இராமாயணம்’ குறித்தும் ‘மகாபாரதம்’ குறித்தும் ஆற்றிய இருபெரும் சொற்பொழிவுகள், இந்தியப் பண்பாட்டின் பெரும் தூண்களாக விளங்கும் அவ்விரு இதிகாசங்களையும் கற்று, அதில் கரை கண்டு ஆய்வுரை வழங்கிய அறிஞர் பெருமக்களையே ஆச்சர்யம் கொள்ள வைத்தன.