நூல் நயம்: விவசாயிகளின் குரல்
உலகமயமாக்கலுக்குப் பிறகும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நம் மண்ணை மலடாக்கிய பின்னரும் அரசுகளின் பாராமுகத்தால் சாவின் விளிம்புக்குத் தள்ளப்படும் இந்திய விவசாயிகளில் ஒருவர் ராம்ராவ்.
உலகமயமாக்கலுக்குப் பிறகும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நம் மண்ணை மலடாக்கிய பின்னரும் அரசுகளின் பாராமுகத்தால் சாவின் விளிம்புக்குத் தள்ளப்படும் இந்திய விவசாயிகளில் ஒருவர் ராம்ராவ். மகாராஷ்டிர மாநிலத்தின் ஹிவாரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான இவர் 2014இல் தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப்பட்டார். விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் பத்திரிகையாளரும் ஆய்வாளருமான ஜெய்தீப் ஹர்திகர், ராம்ராவின் வாழ்க்கையை இந்நூலில் பதிவுசெய்துள்ளார். சமூகச் செயல்பாட்டாளர் பூங்குழலி, இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
ராம்ராவ்: வாழ்வெனும் மரணம் (இந்திய விவசாயியின் நிலை) ஜெய்தீப் ஹர்திகர் (தமிழில்: பூங்குழலி) தடாகம் வெளியீடு விலை: ரூ.350 தொடர்புக்கு: 9840070870 |
விவசாய நட்டத்தை ஈடுகட்டவும் தன் மனைவியின் மருத்துவச் செலவுக்காகவும் கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாய் வரை ராம்ராவ் கடன் வாங்கியிருந்தார். தற்கொலையிலிருந்து மீட்கப்பட்ட ராம்ராவ், அதற்குப் பின்னான வாழ்க்கையை எப்படிக் கடந்தார் என்பதையும் ஆசிரியர் இந்நூலில் விளக்கியுள்ளார். 1995 முதல் 2018 வரை நான்கு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. அரசுகளின் புறக்கணிப்பாலும் செயல்படாத தன்மையாலும் இப்படிப் பலிகொடுக்கப்படும் இந்திய விவசாயிகளின் வாழ்க்கையைப் பொறுப்புடன் பதிவுசெய்துள்ளார் ஜெய்தீப் ஹர்திகர்.