‘வைகை ஆற்றில் கழிவுநீர் 177 இடங்களில் நேரடியாக கலக்கிறது’ - ஆட்சியரிடம் ஆய்வு அறிக்கை வழங்கல்
"வைகை ஆற்றில் 177 இடங்களில் கழிவு நீர் நேரடியாக கலக்கிறது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று ஆய்வு அறிக்கையை மதுரை ஆட்சியர் சங்கீதாவிடம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வழங்கினர்
மதுரை: "வைகை ஆற்றில் மொத்தம் கழிவு நீர் நேரடியாக கலக்கிறது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று ஆய்வு அறிக்கையை மதுரை ஆட்சியர் சங்கீதாவிடம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வழங்கினர்.
சங்க இலக்கியங்களால் புகழப்பட்ட வைகை ஆறு, தென் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களை வளப்படுத்துகிறது. வைகையாறு மேற்கு தொடர்ச்சி மலையில் மேகமலை, வருசநாடு பகுதியில் தோன்றி 295.11 கி.மீ தூரம் பயணித்து, கடைசியில் ராமநாதபுரத்தில் கடலில் கலக்கிறது. சித்திரை திருவிழா, புட்டு திருவிழா, திருமஞ்சம் நீராட்டு, ஆடிப்பெருக்கு நீராடல், ஜனகை மாரியம்மன் அம்பு போடுதல் திருவிழா, மாரியம்மன் தெப்ப திருவிழா, முளைப்பாரி கொட்டுதல், புரவி எடுத்தல், நீர்மாலை எடுத்தல், திதி கொடுத்தல் உள்ளிட்ட திருவிழாக்கள், சடங்குகள் வைகையாற்று நீரை சார்ந்து இன்றும் நடக்கின்றன.